Saturday, May 5, 2012

கோடை பானங்கள்-1

கேரட் ஜூஸ்

தேவையானவை:

கேரட் – 2, பாதாம் பருப்பு – 4, ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, பால் – அரை லிட்டர், கல்கண்டு – 100 கிராம்.

செய்முறை:

கேரட்டைத் தோல் சீவிக் கழுவி, துண்டுகளாக்கி வேக வைக்கவும். பாதாம்பருப்பை ஊற வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். இரண்டையும் சேர்த்து நைஸாக அரைக்கவும். பாலைக் காய்ச்சி, ஆற வைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதுடன் கல்கண்டு, காய்ச்சிய பால் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கி பருக லாம். ஃப்ரிட்ஜில் வைத்தும் பருகலாம்.

குறிப்பு: கோடைக்காலத்தில் நிறைய குழந்தைகள் எதையுமே சாப்பிடாமல் அடம் பிடிக்கும். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு இந்த ஜூஸ் அருமையான உணவு. இதன் மூலமே நிறைய சத்துக்கள் கிடைத்துவிடும். இது, விட்டமின்-ஏ சத்து நிறைந்தது!

ஜிஞ்சர் மோர்

தேவையானவை:

மோர் – 500 மில்லி, பச்சை மிளகாய் – 1, இஞ்சி – சிறு துண்டு, கறிவேப்பிலை – சிறிதளவு, கொத்தமல்லி – சிறிதளவு, பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாயை மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். மோருடன் அரைத்த விழுது, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்துமல்லியைப் போட்டுக் கலந்து பரிமாறவும். விருப்பப்பட்டால் ஐஸ் க்யூப் சேர்த்துக் கொள்ள லாம்.

குறிப்பு: இதில் சேர்க்கப் பட்டிருக்கும் கறிவேப்பிலை, இஞ்சி ஆகியவை வியர்வை யினால் வீணாகும் சத்துக்களை சமன்படுத்தும். அதிக செலவு இல்லாத பட்ஜெட் ட்ரிங்!

கிர்ணி ஜூஸ்

தேவையானவை:

கிர்ணிப்பழம் – 1, பால் – 500 மில்லி, சர்க்கரை – 100 கிராம்.

செய்முறை:

கிர்ணிப் பழத்தை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். காய்ச்சி, ஆற வைத்த பாலை சேர்த்துக் கலக்கவும். பரிமாறும் முன் ஐஸ் க்யூப் சேர்த்துப் பரிமாறலாம்.

குறிப்பு: கிர்ணிப் பழத் துண்டுகளுடன் வெல்லம் சேர்த்தும் சாப்பிடலாம். உடல் சூட்டைத் தணிக்கும்.

மாதுளை ஜூஸ்

தேவையானவை:

மாதுளம் பழம் – 1, சர்க்கரை – 100 கிராம், தேன் – 2 டீஸ்பூன், பால் – ஒரு கப்.

செய்முறை:

மாதுளம் பழத்தை தோல் உரித்து, முத்து எடுத்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். சர்க்கரை, தேன் சேர்த்து நன்கு கலக்கவும். பரிமாறுவதற்கு முன், காய்ச்சி ஆற வைத்த பால், ஐஸ் க்யூப் சேர்த்துக் கலந்து பரிமாறவும். பால் விரும்பாதவர்கள் அதைச் சேர்க்காமலும் பருகலாம்.

குறிப்பு: இந்த ஜூஸில் இரும்புச் சத்து, விட்டமின் சத்து அதிகம். தயாரித்த உடனேயே சாப்பிடுவது சிறந்தது. பித்தத்தைக் குறைக்கும்.

வாழைத்தண்டு ஜூஸ்

தேவையானவை:

வாழைத்தண்டு – இரண்டு துண்டுகள், மோர் – 500 மில்லி, உப்பு – சிறிதளவு.

செய்முறை:

வாழைத் தண்டின் மேல் பட்டையை உரித்து, சிறு துண்டுகளாக நறுக்கி, நார் எடுத்துக் கொள்ளவும். பிறகு, மிக்ஸியில் நைஸாக அரைத்து வடிகட்டவும். மோர், உப்பு சேர்த்து நன்கு கலந்து பருகவும்.

குறிப்பு: இதைப் பருகுவதால், கோடைக்காலத்தில் உருவாகும் சிறுநீரக சம்பந்தமான பிரச்னைகள் வராது. இதில் நார்ச்சத்து அதிகமிருப்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும்.

நெல்லிக்காய் ஜூஸ்

தேவையானவை:

பெரிய நெல்லிக்காய் – 10, தேன் – ஒரு கப், இளநீர் – 1.

செய்முறை:

நெல்லிக்காயை சீவி, கொட்டை நீக்கவும். மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி, மீண்டும் தண்ணீர் சேர்க்கவும். பிறகு, தேன் சேர்த்துக் கலக்கவும். குடிப்பதற்கு முன் இளநீர் சேர்த்துக் கலந்து குடிக்கவும்.

குறிப்பு: இதில் இரும்புச்சத்து அதிகமிருப்பதால் ரத்தச்சோகை வராமல் தடுக்கும். குடல் புண், நீரிழிவு நோய், கண் நோய் போன்றவை வராமல் தடுக்கும்.

ஜிஞ்சர்தனியா ஜூஸ்

 தேவையானவை:

இஞ்சி – அரை அங்குலத் துண்டு, தனியா – 4 டீஸ்பூன், தேன் – 4 டீஸ்பூன், எலுமிச்சம்பழம் – 1.

செய்முறை:

எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து, சாறு எடுத்துக் கொள்ளவும். மிக்ஸியில் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு… தோல் சீவிய இஞ்சி, தனியாவை அரைத்து வடிகட்டவும். இதனுடன் தேன், எலுமிச்சைச் சாறு கலந்து பருகவும்.

குறிப்பு: காலையில் வெறும் வயிற்றில் இதைக் குடிக்க… பித்தத்தினால் ஏற்படும் தலைசுற்றல், வாந்தி, அஜீரணம் நீங்கும்; நன்கு பசி எடுக்கும். இதை வாரம் ஒரு முறை குடிக்கலாம்.

தக்காளி ஜூஸ்

தேவையானவை: தக்காளி – கால் கிலோ, இஞ்சி – சிறு துண்டு, எலுமிச்சம்பழம் – 1, சர்க்கரை – ஒரு கப் (அ) குளூக்கோஸ் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து, சாறு எடுத்துக் கொள்ளவும். தக்காளியைக் கழுவிக் கொள்ளவும். இஞ்சியைத் தோல் சீவவும். மிக்ஸியில் தக்காளி, இஞ்சி இரண்டையும் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்து வடிகட்டவும். எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சேர்த்துக் கலந்து பரிமாறவும். சர்க்கரைக்குப் பதில் குளூக்கோஸ் சேர்க்கலாம்.

குறிப்பு: இது வெயிலினால் தோல் வறண்டு போவதை தடுக்கும்!

அன்னாசிபப்பாளி ஜூஸ்

தேவையானவை:

அன்னாசி, பப்பாளி பழத் துண்டுகள் கலவை – ஒரு கப், சர்க்கரை, பால் – தலா ஒரு கப்.

செய்முறை:

பப்பாளி, அன்னாசிபழத் துண்டுகளுடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். பருகுவதற்கு முன் காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்துக் கலந்து பருகவும். பால் விரும்பாதவர்கள் அதை சேர்க்காமலும் பருகலாம்.

குறிப்பு: இரண்டு பழங்களும் சேர்வதால் வித்தியாசமான சுவையுடன் இருக்கும். அன்னாசிப் பழம், உணவுக் குடலின் செயல்களை சீரமைக்கும். வயிற்றுப் புழுக்களைக் கொல்லும். பசியைத் தூண்டும்.

புதினா ஜூஸ்

தேவையானவை:

புதினா – ஒரு கட்டு, இஞ்சி – சிறு துண்டு, எலுமிச்சம்பழம் – 1, தேன் – 4 டீஸ்பூன், இளநீர் – 1. உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:

இஞ்சியைத் தோல் சீவிக் கொள்ளவும். புதினாவை ஆய்ந்து தண்ணீரில் சுத்தமாக அலசிக் கொள்ளவும். இரண்டையும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து, வடிகட்டவும். எலுமிச்சைச் சாறு, உப்பு, தேன் சேர்த்துக் கலக்கவும். பருகுவதற்கு முன், இளநீர் சேர்த்துப் பருகவும்.

குறிப்பு: இந்த ஜூஸ், வியர்வையினால் உடம்பிலிருந்து இழக்கப்படும் தாது உப்புக்களையும், சத்துக்களையும் உடனே மீட்டுத் தரும். பித்தத்தினால் உண்டாகும் தலை சுற்றலைத் தடுக்கும். வயிற்றுப்போக்கு, அஜீரணக் கோளாறுகளை சரி செய்யும்.


No comments:

Post a Comment